தனியார் நிறுவன ஊழியரை ராட்சத அலை இழுத்துச் சென்றது


தனியார் நிறுவன ஊழியரை ராட்சத அலை இழுத்துச் சென்றது
x

நண்பர்களுடன் கடலில் குளித்த போது தனியார் நிறுவன ஊழியரை ராட்சத அலை இழுத்துச் சென்றது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

நண்பர்களுடன் கடலில் குளித்த போது தனியார் நிறுவன ஊழியரை ராட்சத அலை இழுத்துச் சென்றது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை புதூர்பீளமேடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவரது மகன் சண்முகவேல் (வயது 40). தனியார் நிதி நிறுவனத்தில் கணக்காளர் வேலைசெய்து வந்தார். இந்தநிலையில் தனது நண்பர்கள் ஜானி, தமிழ்செல்வன், ஜேம்ஸ், ரமேஷ் ஆகிய 4 பேருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். நேற்றுமுன்தினம் மாலை கடற்கரை சாலையில் காட்சி கோபுரம் அருகே உள்ள கடல் பகுதியில் 5 பேரும் உற்சாகமாக குளித்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை கடற்கரையை நோக்கி சீறிப்பாய்ந்தது. இந்த அலையில் 5 பேரும் சிக்கிக் கொண்டனர். இதில் சண்முகவேலை தவிர மற்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக அலையில் இருந்து தப்பி கடற்கரைக்கு வந்து விட்டனர்.

ராட்சத அலை இழுத்துச் சென்றது

ஆனால் சண்முகவேலை ராட்சத அலை சுருட்டிக் கொண்டு உள்ளே இழுத்துச் சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சண்முகவேலை காப்பாற்ற முடியவில்லையே என கதறி அழுதனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சண்முகவேலை மீட்க முடியவில்லை. 2-வது நாளாக நேற்றும் மீட்பு பணி தொடர்ந்தது. மேலும் கடற்கரையோரம் ஏதேனும் உடல் ஒதுங்கியுள்ளதா? என போலீசாரும் கண்காணித்தனர். 2 நாட்களாகியும் ராட்சத அலை இழுத்துச் சென்ற சண்முகவேலின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் அவர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கடலில் குளித்த போது தனியார் நிறுவன ஊழியரை ராட்சத அலை இழுத்துச் சென்ற சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story