திருமணம் நிச்சயமான பெண்ணை கடத்த முயன்ற போலீஸ்காரர் கைது
கடையம் அருகே திருமணம் நிச்சயமான பெண்ணை கடத்த முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முப்புடாதி மகன் மாரியப்பன் (வயது 26). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடையத்தை சேர்ந்த 25 வயதுடைய செவிலியரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகி அடுத்த மாதம் (ஏப்ரல்) திருமணம் நடக்க உள்ளது.
இதை அறிந்த மாரியப்பன் தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர் மானூரை சேர்ந்த அருண் (26) மற்றும் 2 பேருடன் நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அவர்கள் திடீரென்று அந்த பெண்ணை கடத்தி செல்ல முயன்றனர். உடனே அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது மாரியப்பனை தவிர மற்ற 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து உடனடியாக கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாரியப்பனை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ்காரர் அருண், பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த அரவிந்த் (25) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். இன்னும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருமணம் நிச்சயமான பெண்ணை கடத்த முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.