லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ்காரர் பலி
லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ்காரர் பலியானார்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேசுவரன் (வயது 32). இவர் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராஜேசுவரன் நேற்று காலை போலீஸ்நிலையத்தில் இருந்து மானாசாலை சோதனைச்சாவடி பணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மறையூர் பாலத்தை கடந்து வளைவில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ராஜேசுவரன் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேசுவரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் விசாரணை நடத்தினார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.