போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்தது
நெய்வேலியில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. பெரும் பாலான தனியார் பஸ்கள் ஓடவில்லை. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீப்பிடித்து எரிந்தது
அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்புக்காக வாகனத்தில் வந்திருந்தனர். அவர்கள் வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் இரவு தங்கள் வாகனத்தை நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி விட்டு, மண்டபத்துக்குள் சென்று படுத்து தூங்கினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென அந்த போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வேன் சேதம்
இதற்கிடையில் அதிவிரைவு படை போலீசாரும் ஓடி வந்து பார்த்தனர். அப்போது வேனின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. உடனே போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வேனின் முன் பகுதி தீயில் கருகி சேதமானது.
பரபரப்பு
தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இது பற்றி நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் வாகனத்தை யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தார்களா? அல்லது பேட்டரியில் மின்கசிவு காரணமாக வாகனம் தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம் என்ன?
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில், வாகனத்தில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த தீ விபத்து நடந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.