நாய் குட்டிகளை பையில் எடுத்து வந்த பிளஸ்-2 மாணவி


நாய் குட்டிகளை பையில் எடுத்து வந்த பிளஸ்-2 மாணவி
x

திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு பிளஸ்-2 மாணவி நாய் குட்டிகளை பையில் எடுத்து வந்தார்.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி சுருதி என்பவர் 10 தெரு நாய்குட்டிகளை 2 பையில் வைத்து எடுத்துக்கொண்டு தனது தாய் கிரிஜாவுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

மனு கொடுக்க காத்திருந்த இடத்தில் அந்த நாய்குட்டிகளை மாணவி பையில் இருந்து எடுத்து வெளியே விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் தெருவில் ஒரு பெண் நாய் 9 குட்டிகளை ஈன்றுள்ளது. இதை தெருவில் வசிக்கும் நபர்கள் சிலர் வெந்நீர் ஊற்றி கொன்றுவிடுவதாக சொல்கிறார்கள். மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு பின்புறம் ஒரு நாய் குட்டி வாகனத்தில் அடிபட்டு 2 கால்களும் செயல் இழந்த நிலையில் உள்ளது.அந்த நாய்குட்டியையும், சோ்த்து 10 நாய் குட்டிகளை கொண்டு வந்துள்ளேன். அதற்கு உணவு அளித்து பராமரிக்க ஏற்பாடு செய்யவேண்டும். அத்துடன், மற்ற தெருநாய்களுக்கும் கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், இதுபோன்ற நாய்குட்டிகள் அனாதையாக தெருவில் சுற்றுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.நாய்குட்டிகளுடன் பிளஸ்-2 மாணவி வந்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் அங்கிருந்த சிலர் நாய் குட்டிகளுக்கு கேக், பிஸ்கட் போன்றவற்றை உணவாக கொடுத்தனர். மேலும் மாணவியின் செயலை கண்டு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி மனு கொடுத்து விட்டு வருவதற்குள் சிலர் நாய் குட்டிகளில் சிலவற்றை தங்கள் வீட்டில் வளர்ப்பதற்காக எடுத்து சென்றுவிட்டனர்.


Next Story