கீழக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய பாசி குவியல்
கடல் சீற்றம் எதிரொலியால் கீழக்கரை கடற்கரையில் பாசி குவியல் கரை ஒதுங்கின.
கீழக்கரை,
மன்னார்வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் காரணமாக தீவு பகுதிகளில் இருந்து பாசி மற்றும் தாழை செடிகளும் குவியல் குவியலாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியில் ஏராளமாக கரை ஒதுங்கி கிடக்கின்றன.இவ்வாறு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி வரும் பாசிகளை கீழக்கரை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இது பற்றி மீனவர்கள் கூறும்போது, இதுபோன்று பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் சீசனின் போது கடலில் இயற்கையாக வளர்ந்து நிற்கும் பாசிகள் கடற்கரையில் கரை ஒதுங்குவது வழக்கமானது தான். இதனால் ஒன்றும் பயப்படத் தேவையில்லை என்றனர்.
. இதேபோல் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு உட்பட்ட மாவட்டத்தின் பல ஊர்களில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் பாசிகள் கரை ஒதுங்கின என்பது குறிப்பிடத்தக்கது.