கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்:போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த முன்னாள் வங்கி ஊழியர் படுகொலை-மதுரையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல்


கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்:போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த முன்னாள்  வங்கி ஊழியர் படுகொலை-மதுரையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல்
x

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்த நிலையில் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த முன்னாள் வங்கி ஊழியரை, அன்றைய இரவிலேயே கும்பல் படுகொலை செய்தது.

மதுரை


கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்த நிலையில் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த முன்னாள் வங்கி ஊழியரை, அன்றைய இரவிலேயே கும்பல் படுகொலை செய்தது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீடு புகுந்து கொலை

மதுரை தெற்குவாசல் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 65), ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். முதல் மாடியில் வசித்து வந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை தேடி வீட்டிற்கு வந்தது. பின்னர் அவரிடம் தகராறு செய்த கும்பல் சரமாரியாக வெட்டியது. சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற வந்த செந்தில்வேலின் மருமகன் மணிமாறனையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த செந்தில்வேல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலைக்கும்பலை பிடிக்க உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

நிலம் அபகரிப்பு

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

கொலை செய்யப்பட்ட செந்தில்வேலுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகள் தனது தந்தையுடனும், 2-வது மகள் சென்னையில் போலீசாகவும், மகன் சென்னையில் தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார்கள். செந்தில்வேலுக்கு பூர்வீக நிலம் சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை அதே ஊரை சேர்ந்த குமார்(39) என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த நிலத்தை தனது தம்பி இளையராஜா (38) பெயருக்கு மாற்றி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ்குமார் (28) என்பவருக்கு விற்றுள்ளனர். இதை அறிந்த செந்தில்வேல் சிவகங்கை நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும், அங்குள்ள பத்திர பதிவு அலுவலகத்திலும் புகார் அளித்தார். அது குறித்து அதிகாரிகள் விசாரித்து அந்த பத்திரபதிவை ரத்து செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த குமார் கடந்த ஆண்டு, சொந்த ஊர் பகுதியில் செந்தில்வேலை கொலை செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தனர்

இந்த வழக்கு தொடர்பாக 12-ந் தேதி (அதாவது நேற்று) கோர்ட்டில் செந்தில்வேல் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்து சாட்சியம் அளித்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நேற்று முன்தினம் செந்தில்வேல் மானாமதுரை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் செந்தில்வேல் கோர்ட்டில் சாட்சியம் அளித்தால் கொலைமுயற்சி வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்று குமார் எண்ணினார். இது குறித்து தனது கூட்டாளிகளிடம் தெரிவித்து அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை வந்துள்ளார். ஒருவர் அவரது வீட்டின்கீழே காவலுக்கு நிற்க 3 பேர் வீடு புகுந்து செந்தில்வேலை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் கைது

இதற்கிடையில் தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கியிருந்த குமார், அவரது தம்பி இளையராஜா, சதீஸ்குமார் மற்றும் முத்துகுமார்(30) ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Related Tags :
Next Story