வேளாங்கண்ணி கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும்
வேளாங்கண்ணி கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும்
வேளாங்கண்ணி
5 ஆண்டுகளில் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க வேளாங்கண்ணி கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள்-மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்,
நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இதில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இந்த ஆலயமானது கீழை நாடுகளின்" லூர்து" நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா" என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ஆண்டு திருவிழா
இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்தமாதம்(செப்டம்பர்) 8-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
அதேபோல் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு மற்றும் தவக்காலம், புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் வேளாங்கண்ணிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகின்றனர்.
கடலில் உற்சாக குளியல்
வேளாங்கண்ணி, நாகூர் பகுதியில் கடற்கரை உள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இங்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்களும் வேளாங்கண்ணிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் உற்சாகமாக கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். மேலும் சனி, ஞாயிறு மற்றும்
முக்கிய விடுமுறை நாட்களிலும் அதிக அளவில் வேளாங்கண்ணி கடலில் கூட்டம் காணப்படும். இவ்வாறு மகிழ்ச்சியாக கடலில் குளிக்கும் போது சோகமான நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. கடலில் குளிப்பவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது.
44 பேர் உயிரிழப்பு
இங்கு கடலோர காவல் படை போலீசார் மற்றும் பொதுமக்கள், மீனவர்கள் ஆகியோர் பாதுகாப்புக்கு இருந்தாலும் கடலில் குளிக்கும் போது அலையில் அடித்து செல்லப்பட்டும், தண்ணீரில் மூழ்கியும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதன்படி இதுவரை 5 ஆண்டுகளில் 44 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிர்பலியை தடுப்பதற்காக தற்போது வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் கடற்கரையில் வலை மூலம் தற்காலிகமாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழுவினர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவ்வப்போது பலி ஏற்பட்டு வருகிறது.
நிரந்தர தடுப்பு வேலி
ஆண்டு விழாவிற்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. எனவே விழாவிற்கு வருபவர்களுக்கு கடலில் குளிக்கும் போது பலி ஏற்படாதவாறு வேளாங்கண்ணி கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும். போதுமான கடலோர காவல் படை போலீசார் மற்றும் காவல்துறையினரை நியமிக்க வேண்டும்.
இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அங்கு பயிற்சிபெற்ற நிரந்தர மீட்புபணியினர் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான போட், லைப் ஜாக்கெட் மற்றும் மீட்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பக்தர்கள், மீனவர்கள், வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரூராட்சி சார்பில் தற்காலிகமாக வலை மூலம் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு வேலியை நிரந்தரமாக அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா கேட்டுக்கொண்டார்.