கடையில் புகுந்து முறுக்கு வியாபாரிசரமாரி வெட்டிக்கொலை


கடையில் புகுந்து முறுக்கு வியாபாரிசரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் கடையில் புகுந்து முறுக்கு வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்நாதன் (வயது 43). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இசக்கிராஜா (15), ஆறுமுகம் (13), சுடலைமுத்து (12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செந்தில்நாதன் முறுக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று இரவில் செந்தில்நாதன் கடையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த 3 மர்மநபர்கள் திடீரென கடைக்குள் புகுந்தனர். அவர்கள், தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக செந்தில்நாதனை வெட்டினார்கள். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த கொலை குறித்து உடனடியாக ஸ்ரீவைகுண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். செந்தில்நாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதை பற்றி அறிந்த செந்தில்நாதனின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை செந்தில்நாதன் உடலை பிரேத பரிசோதனை செய்யவிடமாட்டோம் என்று தெரிவித்து அங்கேயே தரையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனினும் போலீசார் பலத்த பாதுகாப்புடன், செந்தில்நாதன் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பி ஓடிய மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் கடையில் புகுந்து முறுக்கு வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story