திருக்கோவிலூரில்ஆக்கிரமிப்புகளால் நிரம்பிய நிழற்குடை :வெயிலிலும், மழையிலும் பயணிகள் பரிதவிப்பு
திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகளால் நிரம்பிய நிழற்குடையால், வெயில் மழையில் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியையொட்டி, பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
இந்த நிழற்குடையை கடந்த சில மாதங்களாக கொஞ்சம், கொஞ்சமாக தனிநபர்கள் ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். தற்போது ஒட்டுமொத்த நிழற்குடையும் அவர்களது கைக்குள் சென்றுவிட்டது.
சாலையோர வியாபாரிகள் கடை விரித்து, தங்களது வியாபாரத்தை செய்து வருகிறார்கள். இதனால், பஸ் ஏறுவதற்காக வரும் பயணிகள் நிழற்குடையை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். குறிப்பாக வெயில், மழைக்காலங்களில் பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மீட்டு தரக்கோரிக்கை
ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு, பயணிகள் தரப்பில் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பக்க சுற்றுச்சுவர் முழுவதுமே ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சென்று விட்டதால் பயணிகள் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாமல் தவிக்கிறார்கள்.
பஸ் ஏறுவதற்கு பயணிகளுக்கு மட்டுமின்றி, அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கும் ஆக்கிரமிப்பாளர்களே காரணமாகி வருகிறார்கள். எனவே சாலையோர வியாபரிகள் பாதிக்காத வகையில் அவர்களுக்கான மாற்று இடத்தை கண்டறிந்து கொடுத்திட வேண்டும். அதேநேரத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கைக்குள் இருக்கும் நிழற்குடையை மீட்டு பயணிகளை பாதுகாக்கும் நிழற்குடையாக மாற்றி தருவதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.