மொபட் மீது வாகனம் மோதி நர்சு பலி
மொபட் மீது வாகனம் மோதி நர்சு உயிரிழந்தார்.
நர்சு
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கொலக்கொம்பை பகுதியில் உள்ள கிரேக்மோரை சேர்ந்தவர் மருதை. இவரது மகள் மதுமதி (வயது 20). நர்சான இவர், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தனது மாமா மகேந்திரன் (39) என்பவர் வீட்டில் தங்கியிருந்து, சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக மதுமதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் விடுமுறை எடுத்து வீட்டிலேயே இருந்து வந்தார்.
வயிற்று வலிக்கு சிகிச்சை
நேற்று அதிகாலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மதுமதியை மகேந்திரன், அவரது மனைவி இளவரசி (37) ஆகியோர் சிகிச்சைக்காக மொபட்டில் அவர் பணிபுரிந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்த பின்னர் மதுமதியுடன் மகேந்திரன், இளவரசி ஆகியோர் மீண்டும் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
மொபட்டை மகேந்திரன் ஓட்ட, அவருக்கு பின்னால் மதுமதியும், அவருக்கு பின்னால் இளவரசியும் அமர்ந்திருந்தனர். அதிகாலை 4.45 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-நெடுவாசல் பிரிவு சாலை அருகே சென்றனர்.
சாவு
அப்போது அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மொபட்டின் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் மதுமதி, மகேந்திரன், இளவரசி ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக, அதே தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தீவிர சிகிச்சை
சுயநினைவின்றி உள்ள மகேந்திரன், இளவரசி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகேந்திரன் அதே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.