வீட்டில் தூங்கிய நர்சை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய நர்சை தாக்கி 7 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
மணப்பாறை:
சங்கிலி பறிப்பு
மணப்பாறையை அடுத்த செவலூர் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் ஆனந்தி(வயது 43). இவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து ரோஸ்லின் ஆனந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த அவர், அதை தடுக்க முயன்றார். அப்போது அந்த நபர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால், ரோஸ்லின் ஆனந்தியின் தலையில் தாக்கினார். இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். இதையடுத்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
போலீசார் விசாரணை
சத்தம் கேட்டு அங்கு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரோஸ்லின் ஆனந்தியிடம் விசாரணை நடத்தினர். மேலும் வெள்ளைக்கல் பகுதியில் ஆராயி(65) என்பவரிடம் ஒரு மர்ம நபர் சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது அவர் சத்தம் போடவே அங்கிருந்து மர்ம நபர் தப்பியோடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.