பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்


பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்
x

பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்று உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.

திருவண்ணாமலை

பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்று உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.

தாய்ப்பால் வார விழா

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலகத்தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறது.

இதன் மூலம் தாய்ப்பால் அளிப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. தாய்ப்பாலில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

இவ்விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒருகருப் பொருளுடன் இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

சாத்தியமாக்குவோம்

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "தாய்ப்பாலூட்டலைச் சாத்தியமாக்குவோம். உழைக்கும் பெண்களுக்கு மாற்றத்தினை ஏற்படுத்துவோம்" என்பதாகும்.

வேலை செய்யும் இடத்தில் சவால்கள் தான் தாய்ப்பால் ஊட்டாமலிருப்பது அல்லது பரிந்துரைத்த காலத்திற்கு முன்னே நிறுத்துவதற்கான முக்கிய காரணம் என பொதுவான கருத்துகள் நிலவி வருகின்றன.

தாய்ப்பாலூட்டலைத் தொடர தாய்மார்களுக்குப் போதுமான நேரமும், ஆதரவும் தேவை. 3 மாதத்திற்குக் கீழாக மகப்பேறு விடுப்பு உள்ள தாய்மார்கள் 3 மாதம் அல்லது அதற்கு மேலாக விடுப்பு உள்ள தாய்மார்களை விட குறைந்த காலத்திற்கு தாய்ப்பாலூட்டியதாக கண்டறியப்பட்டுள்ளது.

பணியிடம் போதுமான வசதிகளுடன் தாய்ப்பாலூட்ட உகந்த வேலை செய்யும் இடமாக இருக்க வேண்டும். உலகளவில் 42 நாடுகளில் மட்டும் தான் வேலை செய்யும் இடத்தில் தாய்ப்பாலூட்ட வசதிகள் வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

குறைந்தது 6 மாதம் வரை

இன்றைய காலகட்டத்தைப் பொருத்தவரை பெரும்பாலான இளம்தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும் வேலைக்குச் செல்லும் இளம்தாய்மார்களுக்கான சில ஆலோசனை தேவைப்படுகிறது.

தற்போது நம் தமிழ்நாட்டை பொருத்த வரை அரசு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான பிரசவகால விடுமுறை என்பது ஒரு வருடமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமிகவும் வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும் தனியார் அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்களுக்கு குறைந்தபட்சம் ஆறுமாத காலவிடுப்பு கிடைக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒரு குழந்தைக்கு கட்டாயமாக குறைந்தபட்சம் 6 மாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாத காலம் வரை நிச்சயமாக புட்டிப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடாது.

மேலும் இயல்பான பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் அரை மணிநேரத்திற்குள் தாய்ப்பால் புகட்ட வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு 2 மணி நேரத்திற்குள் தாய்ப்பால்புகட்ட வேண்டும். எனவே பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர்ந்து அதனை செயல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story