புதிய உரிமத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்
இறால் பண்ணைகளுக்கான புதிய உரிமத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தில்லைவிளாகம்;
இறால் பண்ணைகளுக்கான புதிய உரிமத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வரவேற்பு
திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழகாட்டிற்கு வருகை தந்த மத்திய மீன் வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல்.முருகன் ஆகியோருக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான கீழக்காட்டில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் பா.ஜ.க. கொடியினை ஏற்றிய மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவிடம் தம்பிக்கோட்டை கீழகாடு இறால் பண்ணை உரிமையாளர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மின்கட்டணம்
இறால் பண்ணைகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். வருடத்துக்கு 6 மாதம் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது. மீதி உள்ள 6 மாதம் பயன்பாடு இல்லாத போது உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். இறால் குஞ்சி வளர்ப்பு நிறுவனங்களின் தாய் இறால் தரத்தை உறுதி செய்ய வேண்டும். இறாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்திட வேண்டும். இறால் பண்ணைகளுக்கான புதிய உரிமத்தை காலதாமதமின்றி வழங்கிடவும் ரினிவல் விரைந்து வழங்க வேண்டும்.
குளிர் சாதன கிடங்கு
பேரிடர் காலங்களில் இறால் பண்ணைகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தம்பிக் கோட்டை கீழக்காடு பகுதிகளில் சுமார் 4000 ஏக்கரில் இறால் பண்ணை தொழில் நடைபெறுகின்றது. அதனால் இப்பகுதியில் இறால்களை பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைத்துதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.அப்போது பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திருவாரூர் மாவட்டம் மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் பலர் இருந்தனர்.