மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாக மாறிய புதிய பஸ் நிலையம்


மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாக மாறிய புதிய பஸ் நிலையம்
x

விராலிமலையில் வாகனம் நிறுத்துமிடம் கட்டி முடித்தும் திறக்கப்படாததால் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாக புதிய பஸ் நிலையம் மாறியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை

வாரச்சந்தை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு அதிகாலை ஆட்டு விற்பனையும், அதனையடுத்து காய்கறி விற்பனையும் நடைபெறும். இங்கு விராலிமலை, துவரங்குறிச்சி, மணப்பாறை, வையம்பட்டி, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து விட்டு செல்வர்.

இந்த வாரச்சந்தைக்கு வாரந்தோறும் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் திங்கட்கிழமையன்று மதியம் முதலே கடைவீதி மற்றும் சந்தைப்பேட்டை பகுதிகள் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும்.

பஸ் நிலையத்திற்குள் நிறுத்துகின்றனர்

இந்த வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களின் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் அருகில் உள்ள புதிய பஸ் நிலையத்தின் உள்ளே நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் உள்ளே வர இயலாத நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்திற்குள் ஒரு சில பஸ்கள் மட்டும் வந்து செல்லும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளால் அந்த ஒரு சில பஸ்களும் உள்ளே வராமல் செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரும் வாகனங்களை இந்த பஸ் நிலையத்திற்குள் நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தி அறிவிப்பு பலகையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்திருந்தனர். அதனையும் பொருட்படுத்தாமல் சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பஸ் நிலையத்திற்கு உள்ளேயே நிறுத்தி விடுகின்றனர்.

கோரிக்கை

மேலும் பஸ் நிலையத்தின் ஒரு புறத்தில் ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. இதனை கட்டிமுடிக்கும் பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சமூக விரோதிகளின் கூடாரம்

விராலிமலையை சேர்ந்த அன்பழகன்:- விராலிமலை புதிய பஸ் நிலையம் கட்டி முடித்து சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை. சுமார் 3.25 கோடி ரூபாய் செலவழிக்க பட்டு மக்களின் வரிப்பணம் வீணாகி கொண்டு இருக்கிறது. இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூடாரமும் இயங்கவில்லை. சந்தை நடைபெறும் அன்று மக்கள் அனைவரும் பஸ் நிலையம் முழுவதிலும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். சொற்பமாக வரும் பஸ்களும் சந்தை அன்று பஸ்நிலையம் உள்ளே வருவதில்லை.

இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு நல்ல தீர்வு தரவேண்டும். பஸ் நிலையம் முழுமையாக மக்களின் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இருப்பினும் அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பஸ் நிலையம் இயங்காமல் இருக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விடுகிறது. இந்த நிலை மாறுவதற்கு தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.

பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

விராலிமலை சந்தைக்கு வரும் வாடிக்கையாளரான வேலூரை சேர்ந்த வடிவேல்:-

நான் பள்ளி நாட்களிலிருந்தே எனது தாயுடன் சந்தைக்கு வருவேன். அப்போது, தற்போது உள்ள சந்தையை காட்டிலும் அதிக இடவசதியுடன் பிரமாண்டமாக சந்தை நடைபெறும். அதன் பிறகு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் இதே பகுதியில் கட்டப்பட்டது. இதனால் சந்தைக்கான இடம் குறைந்துவிட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் வாகனத்தை நிறுத்த இடம் இன்றி பஸ் நிலையத்தின் உள்ளேயே நிறுத்தி விடுகின்றனர்.இதனால் அவ்வப்போது வாகன திருட்டும் அரங்கேறி வருகிறது. இதனால் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த இடம் பயன்பாட்டிற்கு வராததால் மீண்டும் அதே நிலை தொடர்கிறது. அந்த வாகனம் நிறுத்தும் இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

தீர்வு காண வேண்டும்

விராலிமலையை சேர்ந்த சங்கீதா:- பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் அதிகம் வராததால் கூட்டம் அதிகமின்றி அங்குள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பயன்பாடின்றி கிடக்கிறது. அப்படியே கூட்டம் இருந்தாலும் அந்த அறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பெண்கள் கழிவறையும் பஸ் நிலையம் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்கள் தவிர இதுவரை பயன்பாடின்றி கிடக்கிறது.

இதனால் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் பெண்கள் மற்றும் வியாபாரம் செய்ய வரும் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story