ஊருக்குள் புகுந்த குரங்கு
ஊருக்குள் புகுந்த குரங்கு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரம், வெங்கடேசா காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு குரங்கு சுற்றித்திரிந்து வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக சென்று வருகிறது. சில நேரங்களில் குழந்தைகள் கைகளில் வைத்திருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி சாப்பிடுகிறது. அதை தடுக்கும்போது, தாக்க முயல்கிறது.
இதற்கிடையில் குரங்கை காகங்கள் துரத்துவதால் அங்மிங்கும் ஓடுகிறது. எனவே அந்த குரங்கின் நடமாட்டத்தை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில்தான் குரங்குகள் அதிகமாக உள்ளன. காட்டில் சுற்றித் திரிந்த குரங்கள் சுற்றுலா பயணிகள் உணவு பொருட்களை கொடுத்து பழக்கியதால் சாலையில் வந்து நிற்கிறது. இதனால் பஸ், லாரி போன்ற ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறிய குரங்கு ஒன்று வழிதவறி பொள்ளாச்சி நகரில் சுற்றித்திரிந்து வருகிறது.
இந்த குரங்கு பெரும்பாலும் குடியிருப்பு பகுதியில்தான் நிற்கிறது. நேற்று மாலை மகாலிங்கபுரம் பகுதியில் நின்றது. அப்போது காகங்கள் அந்த குரங்கை விடாமல் துரத்தின. இதனால் பயத்தில் அங்மிங்கும் ஓடியது. எனவே ஏதாவது வாகனத்தில் அடிப்பட்டு குரங்கு இறக்கும் முன், வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.