நண்பர்களுடன் மது அருந்திய வியாபாரி திடீர் சாவு
புளியங்குடியில் நண்பர்களுடன் மது அருந்திய வியாபாரி திடீரென இறந்தார்.
புளியங்குடி:
புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் அங்கேயே படுத்து தூங்கி உள்ளனர். நேற்று காலையில் நண்பர்கள் எழுந்து பார்த்தபோது மாரியப்பன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாாியப்பனுக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.