காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு


காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
x

கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

கரூர்

மருத்துவக்கல்லூரி மாணவர்

நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் நவீன்காந்த் (வயது 18). இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தராஜ், நவீன்காந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் காலை சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு சம்பவத்தன்று கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் உள்ள மலையம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்தனர்.ஆனந்தராஜ் தனது குடும்பத்தினருடன் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நவீன்காந்த், உறவினர்கள் பூஜேஸ் (13), நிஷாந்த் (9) ஆகியோர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் பூஜேஸ், நிஷாந்த் ஆகியோரை காப்பாற்றி விட்டனர். நவீன்காந்த் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். பின்னர் காவிரி ஆற்றில் இறங்கி நவீன்காந்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வெகுநேரம் ஆகியதால் தேடும் பணி கைவிடப்பட்டது.பின்னர் மறுநாள் காலை தீயணைப்பு வீரர்கள் 5 மீன்பிடி படகுகளில் ஏறி காவிரி கரையோரங்களில் தேடினர். இந்தநிலையில் மதியம் கரூர் அருகே வாங்கல் செவ்வந்திபாளையம் பகுதியில் நடு ஆற்றில் உள்ள மணல்மேட்டில் நவீன்காந்த் உடல் ஒதுங்கி கிடந்தது. அதைப்பார்த்த தீயணைப்பு வீரர்கள் நவீன்காந்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பெற்றோர் கதறல்

அப்போது அங்கிருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீன்காந்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து வாங்கல் போலீசார் நவீன்காந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story