கியாஸ் ஏற்றி சென்ற லாரி மோதி மின்கம்பம் உடைந்தது
நாகர்கோவிலில் கியாஸ் ஏற்றி வந்த லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்தது. அதே சமயத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் கியாஸ் ஏற்றி வந்த லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்தது. அதே சமயத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
லாரி மோதி மின்கம்பம் சேதம்
கொச்சியில் இருந்து 18 டன் எடை கொண்ட கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி நேற்றுமுன்தினம் புறப்பட்டது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சேகர் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த லாரி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் வந்தது. அப்போது எதிரே வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்தநிலையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதுவதை போல் வந்துள்ளது. இதனால் டிரைவர் லாரியை வலதுபுறமாக திருப்பிய போது அவருடைய கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் லாரி சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அப்போது மின் வயர்கள் உரசியதால் தீப்பொறிகளும் கிளம்பின.
மின் இணைப்பு துண்டிப்பு
லாரியில் 18 டன் கியாஸ் நிரப்பப்பட்டிருந்தது. தீப்பொறி பறந்த சமயத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அந்த மாதிரியான மோசமான நிலை ஏற்படவில்லை.
இதுபோக விபத்து நடந்த இடத்தின் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. மேலும் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்திருந்தாலும் விபத்து நேரிட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததோடு சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சமபவத்தால் வடசேரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.