பூக்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
தொப்பூர் கட்டமேட்டில் பூக்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:-
தொப்பூர் கட்டமேட்டில் பூக்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு பூக்கள் பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் வேல்முருகன் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (22) என்ற கிளீனரும் வந்தார்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு பூக்கள் ஏற்றி வந்த லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
2 பேர் காயம்
இந்த விபத்தில் டிரைவர் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான லாரியில் இருந்து பூக்கள் சாலையில் சிதறி கிடந்தன.
போலீசாரும், விபத்து மீட்பு குழுவினரும் இணைந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.