தாளவாடி அருகே சிறுத்தைப்புலி பசுமாட்டை கடித்து கொன்றது
தாளவாடி அருகே பசுமாட்டை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது.
தாளவாடி
தாளவாடி அருகே பசுமாட்டை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது.
இறந்து கிடந்த மாடு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள இரியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவம்மா (வயது 58). விவசாயி. இவர் 2 மாடுகள் வளர்த்து வருகிறார். இவற்றை தினமும் ஊரையொட்டி உள்ள தனது தோட்டத்தில் மேய்த்துவிட்டு வீட்டில் கட்டி வைப்பது வழக்கம். அதேபோல் அவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்த்துவிட்டு தனது வீட்டு முன்பு கட்டி வைத்துவிட்டு இரவு தூங்க சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை மாதேவம்மா எழுந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அதில் ஒரு பசு மாடு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
சிறுத்தைப்புலி கொன்றது
பின்னர் இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த மாட்டை பார்வையிட்டனர். அப்போது மாட்டின் உடல் அருகே ஏதோ ஒரு விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த கால்தடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் பதிவானது சிறுத்தைப்புலியின் கால்தடம் என்பது தெரியவந்தது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி இரியபுரம் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. பின்னர் மாதேவம்மாவின் வீட்டு் முன்பு கட்டப்பட்டிருந்த பசு மாட்டை கடித்து கொன்றுவிட்டு் அங்கிருந்து சென்றது தெரியவந்துள்ளது.
விவசாயிகள் பீதி
கடந்த வாரம் இதே பகுதியில் புகுந்த சிறுத்தைப்புலி ஒன்று குமார் என்பவரின் காவல் நாயை கடித்து கொன்றது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து பசு மாட்டை கடித்து கொன்றது விவசாயிகளை பீதியடைய செய்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதை கூண்டு வைத்து பிடிக்கவும், இறந்த மாட்டுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.