தாளவாடி அருகே காவலுக்கு இருந்த நாயை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி; கரும்பு தோட்டத்தில் பதுங்கியதால் தீவிர கண்காணிப்பு
தாளவாடி அருகே காவலுக்கு இருந்த நாயை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது. மேலும் கரும்பு தோட்டத்தில் பதுங்கியதால் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே காவலுக்கு இருந்த நாயை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது. மேலும் கரும்பு தோட்டத்தில் பதுங்கியதால் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சிறுத்தைப்புலியின் வேட்டை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் காணப்படுகின்றன.. இதில் சிறுத்தைப்புலிகள் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகின்றன.
தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 39). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். காவலுக்காக தோட்டத்தில் நாயையும் வளர்ந்து வந்தார்.
நாயை கடித்து குதறியது
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. தோட்டத்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த ரங்கசாமி வெளியே வந்த பார்த்தார். அப்போது காவலுக்கு இருந்த நாயை சிறுத்தைப்புலி கடித்து குதறிக்கொண்டு இருந்தது. இதனால் ரங்கசாமி சத்தம்போட்டு அக்கம் பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அதற்குள் சிறுத்தைப்புலி அங்கிருந்த கரும்பு தோட்டத்துக்குள் ஓடி மறைந்துவிட்டது. அதன்பின்னர் ரங்கசாமி அருகில் சென்று பார்த்த போது நாய் செத்து கிடந்தது.
தீவிர கண்காணிப்பு
இதுகுறித்து ரங்கசாமி உடனே தாளவாடி வனத்துறை அதிகாாிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று நாயின் உடலை பார்வையிட்டனர்.
சிறுத்தைப்புலி கரும்பு தோட்டத்திலேயே பதுங்கி உள்ளதா? அல்லது வனப்பகுதிக்குள் ஓடிவிட்டதா? என்று தெரியவில்லை. அதை அறிந்து கொள்ள வனத்துைறயினர் தோட்டத்தை சுற்றிலும் பட்டாசு வெடித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி கரும்பு தோட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. அதனால் அந்த பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.