புனித வியாழனையொட்டி கடலூர் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
புனித வியாழனையொட்டி கடலூர் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனா்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்ந்தெழுத்தார் என்ற கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஏசு கிறிஸ்து உயிர்ந்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களும் கொண்டாடி வருகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய இந்த வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைபிடித்தனர். இதில் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் பவனியாக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.
நேற்று புனித வியாழன் அனைத்து தேவாலயங்களிலும் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி கடலூர் சாமுப் பிள்ளைநகரில் உள்ள தூய இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் புனித வியாழனையொட்டி பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடந்தது. 12 பேரின் பாதங்களை அருட்தந்தையர்கள் கழுவி சுத்தம் செய்தனர். ஏசு கிறிஸ்து தன் சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்ததை நினைவு கூறும் வகையில், இந்த நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பங்கு தந்தைகள் வின்சென்ட், ரொனால்டு ஆகியோர் தலைமையில் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை, பொது ஆராதனை, ஆண்டவரின் திருச்சிலுவை ஆராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஏசு கிறிஸ்து உயிர்ந்த்தெழுந்ததை நினைவு கூறும் ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.