கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்
கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்
கும்பகோணம்
கடந்த 2 மாதங்களில் 240 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி உள்ளது. கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கும்பகோணத்தில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
பா.ம.க. பொதுக்கூட்டம்
தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், வக்கீல் சங்க தலைவர் ராஜசேகர், சமூக நீதிப்பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தி.மு.க., அ.தி.மு.க. மாறி, மாறி ஆட்சி செய்து உள்ளது. திராவிட மாடல் என தற்போது புதிதாக ஒரு வார்த்தை உருவாகி வருகிறது. அந்த திராவிட வார்த்தை தோல்வி அடைந்துள்ளது. நம்முடைய மாடல் பாட்டாளி மாடல் மட்டுமே.
பா.ம.க. 2.0 அனைவருக்குமான வளர்ச்சி
பா.ம.க. 2.0 என்பது அனைவருக்குமான வளர்ச்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது அ.தி.மு.க., தி.மு.க.விற்கு உள்ளடக்கியதா? என்பதை விளக்க வேண்டும்.
உணவு பற்றாக்குறையை போக்க உணவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும். தாயை பாதுகாப்பது போல் காவிரி ஆற்றையும், டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.
தடுப்பணைகள் கட்ட வேண்டும்
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 240 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் அரசிடம் இல்லை. தடுப்பணைகள் அதிகளவில் கட்ட வேண்டும். நீர் மேலாண்மை முதலீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது பா.ம.க. ஆட்சியில் இருந்தால் நிச்சயமாக ரூ.1 லட்சம் கோடி நீர் மேலாண்மைக்காக முதலீடு செய்து இருப்போம். வாக்கை விலை கொடுத்து வாங்குவது தான் திராவிட மாடல். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க. தான். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படலாம். அரசு செயல்பட எதிர்க்கட்சியாக இருப்பது பா.ம.க. தான்.
போதைப்பொருட்களை தடை செய்ய வேண்டும்
தமிழகத்தில் உள்ள இளைஞர்களை மது, சூதாட்டம் போன்ற மும்முனை தாக்குதல் நடந்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 28 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய குழு அமைக்கப்பட்டும் இதுவரை தடை செய்யாதது ஏன்?. போதை தடுப்பு பிரிவில் ஆயிரத்துக்கும் குறைவான போலீசாரே உள்ளனர். அதிகளவில் போதை தடுப்பு பிரிவில் போலீசாரை நியமனம் செய்து போதை பொருட்களை தடை செய்யவேண்டும்.
கும்பகோணம் புதிய மாவட்டம்
கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். அதற்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
அண்ணா பிறந்த நாளுக்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், சமூக நீதிப் பேரவை, இளைஞர் அணியினர், உழவர் பேரியக்கத்தினர், மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.
நினைவு பரிசு
கூட்டத்தில் மாவட்ட பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாசுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வேல், செங்கோல் ஆகியவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக அணைக்கரையில் மாவட்ட தலைவர் அமிர்தகண்ணன், மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.