கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்து கொண்டு ஏரியில் குதித்த தொழிலாளி
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்துக்கொண்டு ஏரியில் குதித்த தொழிலாளி 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பிடிபட்டார்.
செல்போன் பறிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் தங்கி பழைய பேப்பர் சேகரிப்பவர் உமா (வயது 45), இவர் நேற்று மாலை சுரங்கப்பாதையில் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஒருவர் திடீரென அந்த பெண் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அந்த பெண் கூச்சலிடவே அங்கு இருந்த பொதுமக்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது செல்போனை பறித்துக்கொண்டு அதோ ஒருவர் ஓடுகிறார் என்று கூறியுள்ளார். உடனடியாக அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்டோர் அவரை பிடிப்பதற்காக துரத்திச்சென்றனர்.
ஏரியில் குதித்தார்
அப்போது அவர் பொதுமக்களிடம் மாட்டி கொண்டால் தர்மஅடி கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து சுரங்கப்பாதை அருகே உள்ள கூடுவாஞ்சேரி ஏரியில் குதித்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணிடம் செல்போனை பறித்துக்கொண்டு ஏரியில் குதித்த நபரை ஏரி கரையோர பகுதிகளில் சுற்றியுள்ள புதர் பகுதியில் தேடினர்.
ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை, அதன் பின்னர் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏரி கரை பகுதியில் உள்ள புதர்களில் சல்லடை போட்டு தேடி பார்த்தும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் சிக்கவில்லை, அப்போது திடீரென அவர் ஏரியின் நடுப்பகுதியில் உள்ள ஆகாயத்தாமரை படர்ந்துள்ள பகுதியில் மறைந்திருப்பது தெரியவந்தது.
வேடிக்கை பார்க்க குவிந்தனர்
இதற்கிடையே செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் ஏரியில் குதித்த சம்பவம் காட்டுத்தீ போல் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் இடையே வேகமாக பரவியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் ஏரிக்கரையில் போலீசார் திருடனை பிடிப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக குவிந்தனர்.
கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்திவிட்டு போலீசார் திருடனை பிடிக்கும் காட்சிகளை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதன் காரணமாக கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஏரியில் குதித்தவரை பிடிக்கும் முயற்சிகளை போலீசார் மேற்கொண்டனர்.
இதற்கு இடையே ஏரியில் இறங்கி தான் அவரை பிடிக்க முடியும் என்பதால் உடனடியாக போலீசார் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் ஏரியில் இறங்கி அவரை பிடிப்பதற்காக ஏரியின் நடு பகுதிக்கு சென்றனர். அப்போது அவர் தன்னை பிடிப்பதற்கு போலீஸ் வருவதை கண்டு வேகமாக நீச்சல் அடித்து கொண்டு மற்றொரு கரை பகுதிக்கு சென்று ஒளிந்தார்.
கைது
மீண்டும் அவரை பிடிப்பதற்காக ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் செல்லும்போது ஏரியின் மற்றொரு கரை பகுதிக்கு செல்ல முயன்றார். சாமர்த்தியமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார் அவரை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் என்பதும் தற்போது தாம்பரம் பஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் தங்கி இருக்கிறார் என்பதும் தெரியவந்தது. அவரது பெயர் ஸ்டீபன் இருதயராஜ் (வயது 45), கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.