மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பிணமாக மீட்பு
மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
தென்னை மரம் ஏறும் தொழிலாளி
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சைமலை புதூரை சேர்ந்தவர் குமார்(வயது 45). இவருக்கு ராணி என்ற மனைவியும், இளையராஜா என்ற மகனும் உள்ளனர். இளையராஜாவின் கல்லூரி படிப்பிற்காக சொந்த ஊரை விட்டு குமார் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்திற்கு வந்து கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்தார். குமார் தென்னை மரங்களின் மீது ஏறி களை எடுக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் குமார் கடந்த 14-ந்தேதி காலையில் குடும்பத்தினருடன் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது குமார் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடைய வயலில் தங்கியிருந்து வேலை பார்த்து வருவதாக நேற்று முன்தினம் மாலையில் கிடைத்த தகவலின் படி ராணி அங்கு சென்று விசாரித்தார். அப்போது கோவிந்தராஜ், குமாருடன் சேர்ந்து கடந்த 15-ந் தேதி இரவு லாடபுரத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே அமர்ந்து மது அருந்தினேன். பின்னர் குமார் வயலுக்கு செல்வதற்காக கூறி விட்டு சென்றார்.
பிணமாக மீட்பு
சிறிது நேரத்தில் கிணற்றில் யாரோ குதித்ததுபோல் சத்தம் கேட்டு சென்று பார்த்தேன். அப்போது கிணற்றின் உள்ளே யாரும் இல்லாததால் திரும்பி வந்து விட்டேன் என்றார். பின்னர் ராணி சந்தேகத்தின் பேரில் செந்தில் கிணற்றின் அருகே சென்று பார்த்தார். அப்போது கிணற்றில் குமார் பயன்படுத்திய துண்டு, காலணி, புகையிலை பொருட்கள் ஆகியவை மிதந்த நிலையில் கிடந்துள்ளன. இதனால் மது போதையில் குமார் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் ராணி பெரம்பலூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் மாலையில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் கிணற்றில் தேடி பார்த்தபோது குமாரின் உடல் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று மதியம் ராணி மீண்டும் அந்த கிணற்றுக்கு சென்று பார்த்தார். அப்போது குமாரின் உடல் பிணமாக மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.