பீடி கேட்டு தகராறு தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை
பீடி கேட்டு தகராறு செய்ததால் தொழிலாளியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்ற கில்லா (வயது 27). இவர், சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் கொக்குப்பேட்டைக்குச் சென்று மது அருந்தினார். பின்னர் அவர் மட்டும் தனியாக வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கு எதிரே உள்ள ராஜரத்தினம் நகர் அரசு தொடக்கப்பள்ளி அருகே தள்ளாடியபடி நடந்து சென்றார். அப்போது அரசு பள்ளியின் சுற்றுச்சுவரில் அதே பகுதியை சேர்ந்த சிவா (55) மற்றும் எழில்நகரைச் சேர்ந்த ஜான்சன் என்ற கருப்பு (24) ஆகியோர் குடிபோதையில் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் கோபி பீடி கேட்டு தகராறு செய்தார்.
கல்லைப்போட்டு கொலை
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. அப்போது கோபி, திடீரென சிவாவை தாக்கினார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ஜான்சனும், சிவாவும் சேர்ந்து கோபியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர்.
மேலும் அருகில் கிடந்த ஆட்டுக்கல்லை எடுத்து தலையில் போட்டனர். இதில் கோபி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
2 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிவா, ஜான்சன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.