சங்ககிரியில் வங்கியில் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு
சங்ககிரியில் வங்கியில் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரி:
சங்ககிரியில் திருச்செங்கோடு ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சங்ககிரி அருகே மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 46), எடப்பாடி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (47) ஆகிய 2 முன்னாள் ராணுவ வீரர்கள் நேற்று மதியம் 2 மணியளவில் வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கனகராஜ் உடன் பணிபுரியும் சக்திவேலிடம் டி.பி.பி.எல். துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு மதிய உணவு சாப்பிட சென்று விட்டார்.
சக்திவேல் துப்பாக்கியை கீழே சுவருடன் ஒட்டி வைத்தபோது எதிர்பாராதவிதமாக டபுள் பேரல் துப்பாக்கியில் இருந்து இடது பக்க தோட்டா ஒன்று தானாக மேல் நோக்கி சென்று வெடித்தது. மேல் நோக்கி சென்று தோட்டா வெடித்ததால் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கி தோட்டா திடீரென வெடித்த சம்பவம் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.