டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்ற அரசு பஸ்


டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்ற அரசு பஸ்
x

திண்டுக்கல் நாகல்நகரில், டயர் பஞ்சராகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

திண்டுக்கல்

பஞ்சராகி நின்ற அரசு பஸ்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று திண்டுக்கல்லில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோணப்பட்டிக்கு சென்றது.

கோணப்பட்டியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட அந்த பஸ் பின்னர் மீண்டும் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மதியம் 12 மணி அளவில் நத்தம்-திண்டுக்கல் சாலையில் நாகல்நகர் மேம்பாலத்தை கடந்து அந்த பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் ஒன்று பஞ்சரானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது. ஆனாலும் டிரைவர் போராடி அந்த பஸ்சை நிறுத்தினார். நடுரோட்டில் பஸ் நிறுத்தப்பட்டதால், அதனை பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் தவிப்பு

இதற்கிடையே பஸ்சின் டயர் பஞ்சரானது குறித்து தகவலறிந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் விரைந்து வந்து பஞ்சரான டயரை கழற்றிவிட்டு வேறு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரைமணி நேரம் இந்த பணி நடந்தது. அதுவரை கொளுத்தும் வெயிலில் வாகன ஓட்டிகள் தவித்தபடி காத்திருந்தனர்.

பின்னர் வேறு டயர் மாற்றப்பட்டதும் பஸ்சை சாலையோரத்துக்கு ஊழியர்கள் நகர்த்தி கொண்டு வந்தனர். அதன் பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இதற்கிடையே போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்து வாகனங்கள் நெரிசல் இன்றி அப்பகுதியை கடந்து செல்ல வைத்தனர். டயர் பஞ்சராகி அரசு பஸ் நடுரோட்டில் நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story