ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெரிய பள்ளம்


ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெரிய பள்ளம்
x

புத்தளம் சந்திப்பில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

புத்தளம் சந்திப்பில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் குழாயில் உடைப்பு

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் குழித்துறையில் இருந்து கன்னியாகுமரிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் குழாய்கள் அவ்வப்போது உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சாலைகளின் நடுவில் உள்ள குழாைய அகற்றிவிட்டு இரும்பு குழாய்கள் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் புத்தளம் சந்திப்பு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட்டு குடிநீர் திட்டத்திற்கான குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.

அந்த வழியாகத்தான் தொடர்ந்து கனரக வானங்கள் சென்று வந்ததால் நேற்று காலையில் குழாயில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

பெரிய பள்ளம்

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் தண்ணீர் வினியோகத்தை நிறுத்தினர். குழாய் உடைந்ததால் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடந்தது. இந்த பணி நேற்று காலை முதல் இரவு வரை நடைபெற்றது. அத்துடன் சாலையில் பள்ளம் இருந்ததால் புத்தளம் சந்திப்பில் இருந்து மேலகிருஷ்ணன்புதூர், ஈத்தாமொழி செல்லும் சாலை போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story