கோவிலுக்கு நேர்த்திகடனுக்காக சுமார் 18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட ராட்சத அரிவாள்


கோவிலுக்கு நேர்த்திகடனுக்காக சுமார் 18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட ராட்சத அரிவாள்
x

திருப்புவனத்தில் நேர்த்திகடனுக்காக கோவிலுக்கு வழங்க 18 அடி உயர ராட்சத அரிவாள் தயார் செய்யப்பட்டுள்ளது

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாய தேவைகளுக்கான மண்வெட்டி, கோடாரி, கதிர் அறுக்கும் அரிவாள், வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகுவெட்ட பயன்படும் அரிவாள், மேலும் இறைச்சி வெட்ட பயன்படும் கத்திகள், மண்வெட்டி, சாலை வேலைகளுக்கு பயன்படும் பிக்காஸ் என்ற கருவி உள்பட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் பக்தர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களையும் தயாரித்துக் கொடுக்கின்றனர். இந்த நிலையில் இன்று 18 அடி உயர ராட்சத அரிவாள் இங்குள்ள பட்டறையில் தயார் செய்யப்பட்டது.

இதுகுறித்து அரிவாள் தயாரித்துள்ள சேகர் என்பவர் கூறியதாவது:-

எங்களிடம் மதுரையில் உள்ள தனியார் தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் 18 அடி நீளத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க ராட்சத அரிவாள் தயார் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் பேரில் அடிக்கு ரூ. 2250 வீதம் கூலி பேசி ரூபாய். 42 ஆயிரத்தில் ராட்சத அரிவாள் தயார் செய்தோம். இந்த 18 அடி உயர ராட்சத அரிவாளை தினசரி ஆறு பேர் வீதம் 10 நாட்களில் தயாரித்துள்ளோம்.

இதன் எடை சுமார் 200 கிலோ இருக்கும். இந்த அரிவாளின் மூக்கு பகுதி மட்டும் 3 அடி அகலம், கைப்பிடி 8 இஞ்ச் அகலத்தில் 30 கிலோ எடையில் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த அரிவாள் மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட உள்ளது எனவும் கூறினார்.


Next Story