அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி கூழாங்கற்களை கடத்தி வரும் கும்பல்
மரக்காணம் அருகே அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி கூழாங்கற்களை கடத்தி வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
பிரம்மதேசம்
செம்மண் நிறைந்த பகுதிகள்
மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் கனிம வளம் மிகுந்த பகுதி ஆகும். இங்கு கல்குவாரிகள், செம்மண் நிறைந்த பகுதிகள் உள்ளன. ஆலத்தூர், நடுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கூழாங்கற்கள் கலந்த செம்மண் உள்ளது. இதில் அரசுக்கு சொந்தமான நிலமும் உள்ளது.
செம்மண் வளம் நிறைந்த ஆலத்தூர் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாக செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அதிக அளவு செம்மண் உள்ளதால் இங்கு விளைவிக்கப்படும் தர்பூசணி, மணிலா உள்ளிட்ட விளை பொருட்களுக்கு வெளி மார்கெட்டுகளில் நல்ல மவுசு உண்டு.
நிலத்தடி நீர் பாதிப்பு
இத்தகைய சிறப்பு வாய்ந்த பகுதியில் தற்போது நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆம், கும்பல் ஒன்று அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செம்மண் குவாரியை குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறி விவசாயிகளிடம் கூழாங்கற்கள் கலந்த செம்மண் நிலத்தை குத்தகைக்கு வாங்கி பொக்லைன் எந்திரம் மூலம் நிலப்பகுதியில் பல அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதில் இருந்து கூழாங்கற்கள் கலந்த செம்மண்ணை எடுக்கின்றனர். பின்னர் இந்த செம்மண்ணை எந்திரம் மூலம் சல்லடை போட்டு சலித்து கூழாங்கற்களை ரகம் வாரியாக பிரித்து இரவு நேரத்தில் லாரிகள் மூலம் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு லாரி கூழாங்கற்கள் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
அனுமதி வழங்கவில்லை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கூழாங்கல் குவாரி நடத்துவதற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என தெரிவித்தனர். விவசாய நிலம் அருகே அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி கூழாங்கற்கள் கலந்த செம்மண்ணை தோண்டி எடுப்பதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு அனுமதி பெறாமல் பள்ளம் தோண்டி கூழாங்கற்களை கடத்தி வரும் கும்பல் மீது மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.