கோவில் திருவிழாவில் வயதான பெண்களிடம் நகை பறித்த கும்பல்
கடையம் அருகே கோவில் திருவிழாவில் வயதான பெண்களிடம் 21 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் பறித்து சென்றனர்.
கடையம்:
கடையம் அருகே கோவில் திருவிழாவில் வயதான பெண்களிடம் 21 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் பறித்து சென்றனர்.
கோவில் திருவிழா
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் காக்கும் பெருமாள் சாஸ்தா கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டாணி பாறையில் இருந்து பழம் எறியும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
இதில் கடையம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் வயதான பெண்கள் சிலரிடம் நகை பறித்து சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
21 பவுன் நகை பறிப்பு
அதாவது வீரகேரளம்புதூரை சேர்ந்த கருப்பாயி (வயது 75) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி, சுரண்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி இசக்கியம்மாளிடம் 15 பவுன் தங்க தாலி, மற்றொரு மூதாட்டியான சிதம்பரம்மாள் என்பவரிடம் 1 பவுன் தங்க தாலி என மொத்தம் 21 பவுன் தங்க நகைகளை மர்மகும்பல் பறித்து சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேலும் திருவிழாவில் கலந்து கொண்ட சிலரது தங்க நகைகளும் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்க உள்ளனர்.