ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.18½ லட்சம் நிதி
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 17 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.18½ லட்சம் நிதி உதவியை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
சங்கராபுரம்
விளக்க கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணை மானிய திட்டத்தின் விளக்க கூட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் தனியார் மண்டபத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மணி, வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தேவநாதன், முன்னோடி வங்கி மேலாளர் முனீஷ்வரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்ந்து காட்டுவோம் திட்ட இளம்வல்லுநர் அருண்குமார் வரவேற்றார். இணை மானிய திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார் விளக்கினார்.
தொழில் கடன்
தொடர்ந்து பேசிய கலெக்டர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஆகிய வட்டாரங்களை சார்ந்த ஊரக தொழில் முனைவோருக்கு இணை மானிய திட்டத்தின் மூலம் தங்கள் தொழில் திட்ட மதிப்பில் 30 சதவீத மானியத்தில் தொழில் கடன் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், ஆர்வம் உள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
ரூ.18½ லட்சம் நிதி உதவி
பின்னர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஊரக தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஒரு சிறப்பு தொகுப்பாக செயல்படுத்தப்பட்ட இணை மானிய திட்டத்தின் கீழ் சமுதாயப் பண்ணை பள்ளி மூலம் மாடு வளர்ப்பு பயிற்சிக்காக 17 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 600 வீதம் ரூ.18 லட்சத்து 63 ஆயிரத்து 200 நிதியினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், தொழில்நுட்ப வல்லுநர் சம்பத், விஸ்வநாதன், செயல் அலுவலர்கள் சவிதா முத்துராஜா, பழனிசாமி, பிரசன்னன், புஷ்பா, வட்டார அணித் தலைவர் ஏழுமலை மற்றும் சங்கராபுரம், ரிஷிவந்தியம் வட்டார வங்கி மேலாளர்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டபணியாளர்கள் கலந்து கொண்டனர்.