வீட்டில் பச்சை கிளிகள் வளர்த்த மீன் வியாபாரிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்


வீட்டில் பச்சை கிளிகள் வளர்த்த மீன் வியாபாரிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வீட்டில் பச்சை கிளிகள் வளர்த்த மீன் வியாபாரிக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் வீட்டில் பச்சை கிளிகள் வளர்த்த மீன் வியாபாரிக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

வீட்டில் கிளிகள் வளர்ப்பு

நாகர்கோவில் மேல புத்தேரியை சேர்ந்தவர் மெய்யல் (வயது 58). மீன் வியாபாரியான இவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக பச்சை கிளிகள் வளர்த்து வருவதாக மாவட்ட வன அதிகாரி இளையராஜாவுக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வனத்துறையினர் மெய்யல் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 2 பச்சை கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சட்ட விரோதமாக பச்சை கிளி வளர்த்த மெய்யலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதன் பிறகு 2 பச்சை கிளிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து தங்களது பாதுகாப்பில் வைத்து பராமரித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வன பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்க்க கூடாது என்றும் வனத்துறையினர் கூறினர்.

வளர்க்க கூடாத பறவைகள்

இதுபற்றி மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறுகையில், "வீட்டில் பச்சை கிளி வளர்த்து வந்த மெய்யல் என்பவருக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.20 அபராதம் விதிக்கப்பட்டது. வீட்டில் வன பறவைகளான பச்சை கிளி, செந்தலைகிளி, பெரிய பச்சைக்கிளி, அலெக்சாந்தரின் பச்சைக்கிளி, நீல பைங்கிளி, மரகதபுறா, கழுத்தில் புள்ளிஇருக்கும் புறா, மைனா, மயில், பனங்காடை, கழுகு, வல்லூறு இனப்பறவைகள் உள்ளிட்ட பறவைகள் மற்றும் வன விலங்குகள் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே பொதுமக்கள் யாரும் காட்டு பறவையினங்களையோ, காட்டு விலங்குகளையோ வீட்டில் வைத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் வீட்டில் வளர்க்க அனுமதிக்கப்பட்ட லவ்பேர்ட்ஸ் உள்ளிட்ட பறவைகளை வளர்த்துக் கொள்ளலாம். எனவே யாராவது வீட்டில் வன உயிரினங்கள் வளர்த்தால் மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கிளி ஜோதிடம் செய்பவர்களிடம் இருந்தும் கிளிகளை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.


Next Story