விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மீனவர் மாயம்..! மீட்பு பணி தீவிரம்
மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியது. ஒரு மீனவர் மாயமான நிலையில் 4 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் சுப்பு, அருள், கண்ணன், ஷாஜகான், இரவி ஆகிய 5மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
நடுக்கடல் பகுதியில் உள்ள புள்ளிவாசல்தீவு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கிய இந்த படகு கடலில் மூழ்கியது.
படகு கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த ஷாஜகான் என்ற மீனவர் ஒருவரை தவிர மற்ற 4 மீனவர்களும் நீந்தி கரை சேர்ந்து விட்டனர். ஆனால் கடலில் மூழ்கிய மண்டபம் அம்பலகாரை தெருவை சேர்ந்த ஷாஜகான் (வயது 45) மீனவரை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
மாயமான மீனவரை இந்திய கடலோர காவல் படையினரும் மற்றும் கடலோர போலீசாரும் தேடி வருகின்றனர். இதுவரை மாயமான மீனவர் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.