வைகை அணை முன் குளித்த தீயணைப்பு வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்பு


வைகை அணை முன் குளித்த தீயணைப்பு வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்பு
x

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவர், சென்னையில் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் அவர் நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணையில் குளிக்க முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் வைகை அணைக்கு சென்றார். பின்னர் அவர்கள் வைகை அணை முன்பு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் செக் டேம் என்ற இடத்தில் ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர். இதற்கிடையே வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை முன்பு தண்ணீர் வேகமாக வந்தது.

இதனால் குளித்து கொண்டிருந்தபோது சதீஷ்குமார் திடீரென சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். தண்ணீர் அதிகமாக வந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர்கள் வைகை அணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரில் மூழ்கிய சதீஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு வைகை அணை செக் டேம் முன்பு அவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ்குமாருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், மித்ரன், கவிந்திரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

நண்பர்களுடன் குளித்தபோது தண்ணீர் சுழலில் சிக்கி தீயணைப்பு வீரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story