பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து
பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து
கோவைப்புதூர்
கோவைப்புதூர் அருகே பஞ்சு மெத்தை குடோனில் தீப்பிடித்ததால் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
பஞ்சு மெத்தை குடோன்
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக் (வயது 48). மெத்தை வியாபாரம் செய்து வரும் இவர், அதற்காக கோவைப்புதூர் அருகே உள்ள அறிவொளி நகரில் பஞ்சுமெத்தை குடோன் வைத்து உள்ளார். இந்த குடோனில் ஏராளமான பஞ்சு மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று காலையில் இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்ததும் அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனே இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தீப்பிடித்து எரிந்தது
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த குடோனில் இருந்த பஞ்சு மெத்தைகள் அனைத்தும் தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டு இருந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.
ஆனால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவி எரிந்து கொண்டு இருந்தது. இதையடுத்து கூடுதலாக 3 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் 4 லாரிகளும் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி அங்கு பிடித்த தீயை அணைத்து முடித்தனர்.
பொருட்கள் நாசம்
இந்த தீ விபத்தில் அந்த குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.