மஞ்சளாறு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ


மஞ்சளாறு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ
x
தினத்தந்தி 9 Oct 2023 10:30 PM GMT (Updated: 9 Oct 2023 10:31 PM GMT)

வத்தலக்குண்டுவில், பெரியகுளம் சாலையில் மஞ்சளாறு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில், பெரியகுளம் சாலையில் மஞ்சளாறு இருக்கிறது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணை நிரம்பி மறுகால் பாயும் சமயங்களில் இந்த மஞ்சளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக மஞ்சளாற்றில் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஆற்றுக்குள் செடி-கொடிகள், சீமைகருவேல மரங்கள் வளர்ந்து முட்புதராக காட்சியளித்தது.

மேலும் ஆற்றுக்கரையோர பகுதிகளில் குப்பைகளும் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆற்றுப்பகுதியில் கொட்டிக்கிடந்த குப்பையில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் தீ மள, மளவென கொழுந்து விட்டு எரியத்தொடங்கியதால் மஞ்சளாற்றுக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் பகுதியில் தீ பரவியது. இதைப்பார்த்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் வத்தலக்குண்டு மின்சார வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதற்கிடையே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி டிரான்ஸ்பார்மருக்கு தீ பரவும் முன்பு அணைத்தனர். இதனால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story