அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கியாஸ் ஏஜென்சி அலுவலகத்தில் தீ விபத்து
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கியாஸ் ஏஜென்சி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான தொழில் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் அவர் கியாஸ் ஏஜென்சி அலுவலகம், கட்டுமான அலுவலகம் மற்றும் ரசாயன குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அலுவலகங்கள் மற்றும் குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
காவலாளி செல்வராஜ் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் இந்த தொழில்பேட்டை வளாகத்தில் உள்ள கியாஸ் ஏஜென்சி அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி செல்வராஜ், இது குறித்து அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ மளமளவென பக்கத்தில் உள்ள கட்டுமான அலுவலகம் மற்றும் ரசாயன குடோனுக்கும் பரவியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீவிபத்தில் கியாஸ் ஏஜென்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இதன் அருகிலேயே ராம்குமாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அங்குதான் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தது. நல்லவேளையாக தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் கியாஸ் சிலிண்டர் இருந்த குடோனுக்கு தீ பரவவில்லை. ஒருவேளை அந்த குடோனுக்கும் தீ பரவி இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.
தீ விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.