காப்பீடு தொகையை கொடுக்காததால் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம்
காப்பீடு தொகையை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நாகர்கோவில்:
காப்பீடு தொகையை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
இன்சூரன்ஸ் நிறுவனம்
விளவங்கோட்டை சேர்ந்தவர் பால்ராஜ், அரசு பஸ் டிரைவர். இவர் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் காப்பீடு செய்திருந்தார். அதன் பிறகு அவர் நோய் வாய்ப்பட்டதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கான பணத்தை தரக்கோரி நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்தார்.
பின்னர் கலெக்டர் தலைமையிலுள்ள காப்பீடு தொகை அனுமதி அளிக்கும் குழுவிடமும் மனு அளித்துள்ளார். இந்த குழு பால்ராஜின் மனுவை பரிசீலித்து ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் முறையான காரணம் தெரிவிக்காமல் இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க மறுத்துள்ளது.
அபராதம்
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பால்ராஜ் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான பால்ராஜ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி ரூ.7,500 அபராதம் விதித்தனர். அந்த தொகையை நஷ்ட ஈடாக பால்ராஜிடம் வழங்கவும் வலியுறுத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பால்ராஜிக்கு மருத்துவ செலவுத் தொகை ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 167 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறியிருந்தனர்.