வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் லால் மோகன் (வயது 62). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் வடசேரியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது ஓய்வூதிய சேமிப்புக் கணக்கை வைத்துள்ளார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அழைப்பு வந்துள்ளது. அவரும் தனது ஆதார் எண்ணை கொடுத்துள்ளார். கொடுத்த சில நிமிடங்களில் ரூ.25 ஆயிரம் அவரது சேமிப்புக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.

இதேபோன்று பலமுறை அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனாலும் பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியிடம் கேட்டபோது, உரிய பதில் வழங்கவில்லை. மேலும் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் வங்கியில் இருந்து பதில் வரவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த லால்மோகன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட லால் மோகனுக்கு ஏற்கனவே வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.70 ஆயிரம் மற்றும் நஷ்டஈடு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story