பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்; 45 இடங்களில் நடத்தப்பட்டது
நெல்லை மாவட்டத்தில் 45 இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனையடுத்து டெங்கு பாதிப்பை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் நேற்று முதல் 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்திலும் நேற்று 45 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடந்தது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவாமல் இருக்க மாவட்ட சுகாதார மற்றும் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உடல் வெப்பநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்படுகிறது.
கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 10 மொபைல் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மொபைல் வாகனத்திற்கு 3 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 10 வாகனங்கள் மூலமாக 30 இடங்களில் முகாம் நடந்தது. இந்த வாகனங்கள் வட்டாரத்துக்கு 3 இடங்களில் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் 15 இடங்களில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. நல்ல டவுன் பாரதியார் தொடக்கப்பள்ளி நடந்த டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை பி.எம்.சரவணன் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். முகாமில் சுகாதார அலுவலர் இளங்கோ, டாக்டர்கள் கீதா, ராணி, பாப்பு, சுமதி, ஈஸ்வரி, ஆனந்தராஜா, சுகன்யாதேவி, தமிழரசி, ஜெயரஞ்சிதம் பாக்கியநாதன், சிவபாக்யா, சிந்துஜா, ஜெய கவுசிகா மற்றும் செவிலியர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.