கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பரிதாப சாவு
பணகுடியில், கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர்.
பணகுடி:
பணகுடியில், கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர்.
தொழிலாளி
நெல்ைல மாவட்டம் பணகுடியை அடுத்த முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 55), தொழிலாளி. இவருடைய மகள் ஜான்சி (24). இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. ஜான்சி வள்ளியூரில் ஒரு தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று காலை ஜான்சி வேலைக்கு புறப்பட்டார். அப்போது அவருடைய தந்தை அய்யப்பன், மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று விடுவதாக கூறியுள்ளார். இதனால் தந்தையுடன் ஜான்சி மோட்டார்சைக்கிளில் செல்ல முடிவு செய்தார்.
கார் மோதியது
இதன்பின்னர் அய்யப்பனும், ஜான்சியும் மோட்டார்சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டனர். அய்யப்பன் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்செல்ல, ஜான்சி பின்இருக்கையில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தார்.
பணகுடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து தடுப்பை கடந்து மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வள்ளியூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற கார் திடீரென ேமாட்டார்சைக்கிள் மீது மோதியது.
தந்தை-மகள் பலி
இந்த விபத்தில் ஜான்சி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
அய்யப்பனும் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இதுபற்றி தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான வள்ளியூரை சேர்ந்த மணிகண்டனை கைது செய்தனர்.
பலியான அய்யப்பன், ஜான்சி உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை, மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.