வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்


வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
x
தினத்தந்தி 11 March 2023 11:30 PM IST (Updated: 11 March 2023 11:30 PM IST)
t-max-icont-min-icon

வைரஸ் காய்ச்சல் பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். வைரஸ் காய்ச்சல் குறித்து டாக்டர், பொதுமக்கள் கருத்து:-

தேனி

புதுப்புது பெயர்களில் தோன்றும் புயல் போன்று தற்போது புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் அறிமுகமாகி வருகிறது.

உடல் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது. இதனால்தான் வீடுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கு பீதி ஏற்படுகிறது.

'இன்புளூயன்சா' வைரஸ்

காய்ச்சல் ஒரு சுவாச தொற்று நோய். இது மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலை பாதிக்கும் 'இன்புளூயன்சா' என்ற வகை வைரசால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தசை வலி, சோர்வு, தலைவலி, இருமல் குறிப்பாக இரவில் அதிகரிக்கும் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட வரலாம் என்கின்றனர்.

சென்னையை பொருத்த வரையில் கடந்த 60 நாட்களாக வைரஸ் காய்ச்சல் காணப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கடமலைக்குண்டு உள்பட சில இடங்களில் காய்ச்சல் பாதிப்பு கடந்த ஒரு மாத காலமாக சற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ஆஸ்துமா, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நிலைகளையும் இந்த வகை காய்ச்சல் மோசமாக்கிவிடுவதால் பொதுமக்களால் அஞ்சப்படுகிறது. பொதுவாக, உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி பாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்சினையில்லை. அதை தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமாக காய்ச்சல் காலம் செப்டம்பரில் தொடங்கி நவம்பரில் உச்சத்தை எட்டும். டிசம்பர்-ஜனவரிக்கு பிறகு, நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக குறையும். ஆனால் இந்த ஆண்டு காய்ச்சல் சீசன் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து தொற்று பரவுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், எச்1என்1 பாதிப்பு காணப்பட்டது. வாரங்கள் பல கடந்த நிலையில், எச்3 என்2 மற்றும் 'இன்புளூயன்சா' பி வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காண முடிகிறது. இப்போது, ரைனோவைரஸ் மற்றும் ஆர்.எஸ்.வி. (சுவாச ஒத்திசைவு வைரஸ்) போன்ற வைரஸ்களின் கலவையும் பரவுகிறது. இதனால் சராசரியாக தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நோயாளி களும், அவசரநிலையில் 10 நோயாளிகளும் வருகின்றனர்' என்று தொற்று நோய்கள் ஆலோசகர்களும் கூறுகின்றனர்.

2 பேர் பலி

நாடு முழுவதும் 'எச்3 என்2' வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த காய்ச்சலுக்கு அரியானாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி உள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

அதிக தண்ணீர், திரவ உணவு

வைரஸ் காய்ச்சல் குறித்து ஆண்டிப்பட்டியை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் செல்வக்குமார் கூறும்போது, 'தற்போது அதிகமாக காணப்படும் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியவை பருவகாலத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் பருவகாலத் தொற்று வகையை சேர்ந்ததாகும். பெரும்பாலானவர்களுக்கு சிறிய அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், பச்சிளம் குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். அதிக காய்ச்சல், மூச்சுத்திணறல், குழந்தை சுணக்கம் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். சுய வைத்தியம் மிகவும் ஆபத்தானது. கண்டிப்பாக சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக தண்ணீர், திரவ உணவுகளை அளிக்கலாம். இருமல் இருவாரங்களுக்கு குறையாமல் இருக்கலாம். இது ஒரு வைரஸ் வகையினால் ஏற்படும் நோய். எனவே, வருமுன் காப்பதே சிறந்தது. முககவசம் அணிதல், வெளியில் சென்று வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவை நோய் பரவாமல் தடுக்கும்' என்றார்.

மாநில எல்லையில்...

கூடலூரை சேர்ந்த உரக்கடை உரிமையாளர் முருகன் கூறும்போது, 'தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதியில் கூடலூர் நகரம் அமைந்து உள்ளது. தற்போது கூடலூர் நகர பகுதியில் புதிதாக வைரஸ் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதன் அறிகுறியாக முதலில் இருமல், தொண்டைவலி, காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும் இதன் தாக்கம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்குகிறது. பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தனியார் ஆஸ்பத்திரிகளை நாடிச் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே மருத்துவ துறையினர் கூடலூர் நகர பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து வைரஸ் காய்ச்சல் தாக்கிய நோயாளிகளுக்கு ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். நகராட்சியினர் அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து தெளித்து கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் நகரம் மாநில எல்லையில் உள்ளதால் கேரள மாநிலத்துக்கு கூலி வேலைக்கு சென்று திரும்பும் கூலி தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் மூலம் நோய் பரவாமல் தடுக்க மாநில எல்லையில் நோய் தடுப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்' என்றார்.

போர்க்கால நடவடிக்கை

தேனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பஞ்சவர்ணம் கூறும்போது, 'பள்ளி குழந்தைகள் தான் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பள்ளிகளில் கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் சுத்தமாக இருக்கிறதா என்று அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் பள்ளிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்க வேண்டும். வெவ்வேறு பெயர்களில் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருப்பது ஒருவித அச்சத்தை கொடுக்கிறது. எனவே, பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

உப்புக்கோட்டையை சேர்ந்த இல்லத்தரசி வைத்தீஸ்வரி கூறும்போது, 'முன்பு எல்லாம் குழந்தைகளுக்கு எப்போதாவது காய்ச்சல் வரும். ஓரிரு நாட்களில் சரியாகி விடும். ஆனால், தற்போது வரும் காய்ச்சல் குணமாக அதிக நாட்கள் ஆகிறது. காய்ச்சல் சரியானாலும், இருமல், உடல் சோர்வு 2 வாரத்துக்கும் மேல் நீடிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. காலநிலை மாற்றமா? சுற்றுப்புறச்சூழல் கேடு?, கொசு தொல்லையா? இவற்றில் எதனால் இந்த காய்ச்சல் வருகிறது? என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. இப்படியே குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து கொண்டு இருப்பதால் ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்க முடியாது என்று மட்டும் நன்றாக தெரிகிறது. எனவே சுகாதாரத்துறை இதனை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Related Tags :
Next Story