திண்டுக்கல்லில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்


திண்டுக்கல்லில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
x
தினத்தந்தி 8 March 2023 2:00 AM IST (Updated: 8 March 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

திண்டுக்கல்

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான உடல்வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 'இன்புளூயன்சா ஏஎச்3என்2' வகை வைரஸ் கிருமிகளால் காய்ச்சல் பரவுகிறது என்பது தெரியவந்தது. இந்தநிலையில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி, கடந்த மாதம் சுமார் 700 பேர் வெளிநோயாளிகளாகவும், 255 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல் இந்த மாதம் இதுவரை சுமார் 175 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று உள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 42 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும் மழை மற்றும் குளிர் காலத்தில் வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மேலும் இந்த வகை வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி பின்பற்றுதல், முககவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தாமதமின்றி டாக்டரின் ஆலோசனை படி சிகிச்சை பெற வேண்டும் என்றார்.


Next Story