காட்டு யானை தாக்கி விவசாயி பலி


காட்டு யானை தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமுகையில் காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்,

சிறுமுகையில் காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.

விறகுகளை சேகரித்தார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்த லிங்காபுரம் அருகே காந்தவயல் பகுதி உலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 57), விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். அவர் ஆடுகளை மேய்ப்பதற்காக காந்தவயல் வனப்பகுதிக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி ராதாகிருஷ்ணன் காந்தவயல் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்க்க சென்றார்.

பின்னர் அங்கு விறகுகளை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது காட்டு யானை ஒன்று திடீரென புதரில் இருந்து வெளியே வந்தது. யானையை கண்டதும் அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தார். பின்னர் துரத்தி வந்த காட்டு யானை, அவரை துதிக்கையால் தாக்கி தூக்கி வீசியது. இதில் ராதாகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ராதாகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராதாகிருஷ்ணனின் மனைவி கரியம்மாள் சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story