கருகிய நெற்பயிரை டிராக்டர் கொண்டு அழித்த விவசாயி


கருகிய நெற்பயிரை டிராக்டர் கொண்டு அழித்த விவசாயி
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாசி படர்ந்து கருகி சேதமான ஒரு மாத நெற்பயிரை டிராக்டர் கொண்டு விவசாயி அழித்தார்.

மயிலாடுதுறை

கருகிய பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 22 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீரைக் கொண்டு மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஆற்றில் நீர்வரத்து இல்லாமை மற்றும் இயல்பைவிடக் குறைந்த மழைப்பொழிவு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

மயிலாடுதுறை அருகே பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், போர்வெல் மூலம் வயலில் இறைக்கப்படும் தண்ணீரில் பச்சைப்பாசி படர்ந்ததால் பயிர்கள் கருகி நாசமாகியது. பொன்னூர் கிராமத்தில் விவசாயி அகோரம் என்பவரது நிலத்தில் பாசி படர்ந்ததன் காரணமாக நெற்பயிர்கள் முற்றிலும் கருகி சேதமடைந்தது.

டிராக்டர் கொண்டு அழிப்பு

இந்த பயிர் பாதிப்பினை தமிழக கனிம வளத்துறை இயக்குனர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் சேகர் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் பேராசிரியர் ராஜப்பன் தலைமையில் பயிர் நோயியல் துறை, உழவியல் துறை, மண்ணியல் துறை விஞ்ஞானிகள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். மேலும் இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தாலுகாக்களில் பாசி பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக வளர்ந்து, பின்னர் கருகிய பயிர்களை விவசாயி அகோரம் டிராக்டர் கொண்டு அழித்தார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறு மழை பெய்யும் பட்சத்தில், நிலத்தடி நீர் மட்டம் உயரும், அதனால் போர்வெல் தண்ணீரில் பச்சைப்பாசி பாதிப்பு நீங்கும் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் நடவுப்பணியை மேற்கொள்ள உள்ளதாக விவசாயி அகோரம் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story