கூகுள் மேப் பார்த்தபடி காரில் சென்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினர்
காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்து வரும் மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது
இந்த நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், சர்ஜாபூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்றிரவு திரும்பினார். அப்போது கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி சென்றார். செல்போனை பார்த்தபடியே காரை ஓட்டிய ராஜேஷ் பேக்கப்பள்ளி பகுதியை கடந்தார். ஆனால் மழையால் அப்பகுதியில் இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது தெரியாமல் காரை அந்த தரைப்பாலத்திற்குள் இறக்கிவிட்டார்.
இதனால் காரை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.