பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகம்


பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகம்
x

தண்ணீர் வசதி இல்லாததால் கறம்பக்குடியில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை

பொது சுகாதார வளாகம்

கறம்பக்குடி தெற்கு அரிஜன தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டிற்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சுமார் ரூ.12.50 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு தனி தனியாக கழிவறை மற்றும் குளியல் அறைகள் கட்டப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் நலன்கருதி சாய்தளம் உள்ளிட்ட வசதிகளும் இந்த பொது சுகாதார வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கட்டிட பணிகள் முடிந்து 6 மாதங்களுக்கு மேலான நிலையில் தண்ணீர் வசதி இல்லாததால் இந்த சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. கட்டிட பணிக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படாததால் பணிகள் முடிந்தும் இந்த சுகாதார வளாகம் கேட்பாரற்று கிடக்கிறது.

பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்

இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் வெட்ட வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சுகாதார வளாகம் அமைத்தும் தண்ணீர் வசதி செய்து தரப்படாததால் பயன்படுத்த முடியவில்லை.

இதே நிலை தொடர்ந்தால் பயன்பாடு இல்லாமல் சுகாதார வளாக கட்டிடம் வீணாகும் நிலை ஏற்படும். சுகாதாரம் பேணும் அரசின் நோக்கமும் நிறைவேறாது. எனவே இந்த சுகாதார வளாகத்தில் ஆழ்குழாய்கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story